search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா வெள்ளம்"

    மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாவது நாளாக பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 100 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தற்போது அங்கு மழை ஓய்ந்து நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கேரள மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனாலும் அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிகவும் அதிகம் என்பதால் பல ஆயிரம் மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கி உள்ளனர்.

    கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று கேரளா சென்றார். அவர், செங்கனூர், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கேரள வெள்ளத்தின் போது, மீனவர்கள் அந்த மாநில மக்களை மீட்க எடுத்த முயற்சிகளை ராகுல்காந்தி பாராட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது மீனவளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் ஹெலிகாப்டரிலும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார். செங்கனூர் கல்லூரியில் உள்ள முகாமில் தங்கி இருந்த மக்களை சந்தித்து விட்டு அங்குள்ள ஹெலிபேடு தளத்திற்கு ராகுல்காந்தி சென்றார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கேரள வெள்ள சேதங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். அவர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கேரள காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர். மேலும் கோழிக் கோட்டில் நிவாரண முகாம் களில் தங்கி உள்ள பொதுமக்களையும் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, “கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மிகமோசமாக இம்மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும்” என கூறினார். 
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். #KeralaFlood #Modi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் குறித்து, டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து மாநில கவர்னர் சதாசிவம் எடுத்துரைத்தார். அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, கேரளாவுக்கு தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.600 கோடி, வெறும் முன்பணம் மட்டும்தான் எனவும், மாநிலத்துக்கு மேலும் கூடுதல் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.



    இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்த கவர்னர் சதாசிவம், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் மற்றும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, கேரளாவில் சேத விவரங்கள் கண்டறியும் பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் நிதி வழங்கப்படும் என உள்துறை மந்திரியும் உறுதியளித்தார்.

    இந்த தகவல்கள் அனைத்தும் கேரள கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaFlood #Modi
    கேரள அரசின் கோரிக்கையை ஏற்று 250 டிரான்ஸ்பார்மர்கள், 40 ஆயிரம் மீட்டர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #KeralaFloods
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். அப்போது தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் (அ.தி.மு.க.) தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எந்த தேர்தல் வந்தாலும் அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு பயம் கிடையாது. குற்றம் சொல்லும் கட்சிக்காரர்களுக்குதான் பயம்.

    வெள்ளத்தால் கேரள மாநிலம் பாதித்துள்ளது. கேரள அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பாக கேரளாவுக்கு 250 டிரான்ஸ்பார்மர்களும், 40 ஆயிரம் மீட்டர் பெட்டிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்) நியமனத்திற்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது. எனவே இந்த ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் (கடந்த ஆண்டு சைக்கிள் வாங்காதவர்கள்) விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KeralaFloods
    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி வருவதால், மக்கள் துன்புற்று இருக்கும் நிலையில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #Onam
    திருவனந்தபுரம்:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைகள் திறப்பால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து மேலும் வெள்ளக்காடாக பல்வேறு இடங்கள் காணப்படுகிறது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரூ.100 கோடி உடனடியாக அனுப்பப்படும் என அறிவித்தார். முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண நிதி அளிக்குமாறு முதல்வர் பினராயி விஜயனும் கோரிக்கை விடுத்திருந்தார்.


    ஓணம் கொண்டாடம் (கோப்புப்படம்)

    இந்நிலையில், கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் நாளை தொடங்குகிறது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த பண்டியை அரசின் சார்பாக பல இடங்களில் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசின் சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டியை ரத்து செய்யப்பட்டு அந்த பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் என பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார். 
    ×